“எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வேண்டாம், ரேஷன் கடையில் நாங்கள் அரிசி வாங்கிக் கொள்கிறோம். வெள்ள நீருக்கு தீர்வு சொல்லுங்கள்!” என்கின்றனர் செம்மஞ்சேரியில் திரண்டுள்ள பெண்கள் குழு.
காஞ்சீபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இப்பகுதி சென்னையின் தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நவம்பர் 25, 2020 அன்று கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
நீரினால் சூழப்படுதல் என்பது தாழ்வான இப்பகுதிகயைச் சேர்ந்த மக்களுக்கு புதியதோ, அசாதாரண நிகழ்வோ இல்லை. 2015ஆம் ஆண்டு சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்தபோது, செம்மஞ்சேரியும் பாதிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தெருக்களில் வெள்ள நீர் வடிகால்களை அமைத்துவிட்டனர்.
வீட்டுவசதி வாரியத்தைச் சேர்ந்த செம்மஞ்சேரி ( செம்மஞ்சேரி ) மட்டும் நிராகரிக்கப்பட்ட பகுதி. காலப்போக்கில் ஏற்பட்ட நகர வளர்ச்சி, உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றால் இடம்பெயர்வு செய்யப்பட்ட குடும்பங்களே இங்கு வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் சென்னை நகரில் துப்புரவு பணிகள், ஆட்டோ ஓட்டுதல் அல்லது முறைசாரா பிற பணிகளை செய்கின்றனர்.
தமிழ்நாட்டை நிவர் புயல் தாக்கியபோது கடலூரில் அதிகபட்சமாக 250 மிமி மழை பதிவானது. சென்னையில் 100 மிமி மழை பெய்தது. இதனால் செம்மஞ்சேரியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து சாலைகளையும் மூழ்கடித்துவிட்டது.

செம்மஞ்சேரியில் புதிதாக உருவாகியுள்ள 'ஆற்றில்' மிதக்கும் ஆட்டோவிற்கு உதவும் சிறுவர்கள்
புதுச்சேரி அருகே சென்னையின் தெற்கு கடலோரப் பகுதியை (நவம்பர் 25, இரவு 11.15 மணி), புயல் கரையை கடந்த அடுத்த நாளான நவம்பர் 27ஆம் தேதியன்று செம்மஞ்சேரிக்கு பாரி சென்று வந்தது. இப்புயலில் மூன்று பேர் உயிரிழந்தனர்
1.38 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். 16,500 ஹெக்டேர் நிலங்களில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன (பல செய்தித்தாள்களின் செய்தி அறிக்கை) கடலோர பெருநகரங்கள், நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தன..
கிட்டதட்ட 30,000 பேர் வசிக்கும் செம்மஞ்சேரியில் இக்காட்சிகள் பொதுவானவை - வீடுகளில் வெள்ளம் புகுந்து உடைமைகளை சேதப்படுத்துவது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல நாட்களுக்கு மின்சாரமின்றி இருப்பது, மாடியில் வசிப்பவர்களுடன் தங்கியிருக்க வேண்டிய சூழலுக்கு ஆட்படுவது, கழிப்பறைகள் மூழ்கி, சாக்கடைகள் வழிவது, பாம்புகள், தேள்கள் வீட்டிற்குள் திரிவது, வீட்டுச் சுவர் இடிவது போன்றவை.
இதெல்லாம் ஏன் நடக்கிறது? தாழ்வான பகுதி என்பதால் மட்டுமில்லை. புதிதாக மேடு செய்வதால் சிக்கல் மேலும் அதிகரித்து ஏற்கனவே உள்ள நீர் வடிகால்களை துண்டித்துவிட்டன. உள்ளூர் ஏரிகள் வழிவது, மாநிலத்தின் நீர்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறப்பது என அனைத்தும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடுகிறது. மீள்குடியேற்ற காலனிகளின் உயரமான மதில்கள் - சில 10 அடி உயரத்தில் கூட உள்ளன - வெளியிலிருந்து பார்க்கும்போது குறைந்த வருவாய் மக்களின் வாழ்விடம் தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடோ.
எப்போது இங்கு பெருமழை பெய்தாலும் தெருக்கள் ஆறுகளாகி வாகனங்கள் படகு போல மிதக்கின்றன. சாலைகளின் நடுவில் துணி வலைகளை அமைத்து சிறுவர்கள் மீன் பிடிக்கின்றனர். வீடுகளில் தேங்கியுள்ள நீரை ஐந்து லிட்டர் வாளியில் வெளியேற்றும் வேலையில் தாய்மார்கள் நாட்களை கழிக்கின்றனர்.
“இங்கு ஆண்டுதோறும் சுனாமி ஏற்படுகிறது, யாரும் இங்கு வருவதில்லை, வாக்கு கேட்க மட்டும் வருகின்றனர்,” என்கின்றனர் பெண்கள். “பட்டினப்பாக்கம், ஊரூர் குப்பம், சென்னையின் பிற பகுதிகளில் இருந்து இங்கு 2005ஆம் ஆண்டு வந்தோம். எங்களை இங்கு இடம் மாற்றிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாளிகைகளில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், எங்களைப் பாருங்கள்!”
ஓரடி உயர வெள்ளத்தில் நிற்கும் பெண்களும், குழந்தைகளும் நீரை வெளியேற்றும் வடிகாலுக்கு வழி கேட்கின்றனர்.

இங்கு எப்போது பெரிய மழை பெய்தாலும் தெருக்கள் ஆறுகளாகி விடும். குழந்தைகள் நீரில் குதித்து, நீந்தி விளையாடுகின்றனர்

அல்லது சாலையின் நடுவில் துணி வலையில் மீன் பிடிக்கின்றனர் - இங்கு குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு அருகே சிறுவர்கள் குரவை மீன்களைப் பிடித்தனர்

ஒட்டுமொத்த குடும்பங்களும் இணைந்து சாலைக்கு நடுவில் ஓடும் வெள்ள நீரில் துணிகளைத் துவைக்கின்றனர். ஆண்களும் கூலி வேலைக்குச் செல்ல முடியாததால் அவர்களுக்கு உதவி செய்கின்றனர்

வெள்ள நீரை கடந்தபடி நான்கு பேர் கொண்ட குடும்பம் வீடு திரும்புகிறது

புயல் வருவதை அறிந்து வீட்டிற்குள் நீர் புகாமல் தடுக்க அவசரமாக கட்டிய சிறிய வாசல் தடுப்பிற்கு பின்னால் நிற்கும் குடும்பம் (இடது)

வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பிளாஸ்டிக் நாற்காலிகளில் பகல் பொழுதை கழிக்கும் பெரியவர்கள்

‘வெள்ள மறுவாழ்வு‘ என்று எழுதப்பட்ட பழைய இரும்பு கட்டிலின் மீது காய்ச்சலுடன் அமர்ந்திருக்கும் இளம்பெண்

சோப்பைக் கொண்டு வீட்டை முடிந்தவரை சுத்தம் செய்யும் குடும்பம். கழிவு நீரில் வெள்ளம் கலந்ததால் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது

சிறிதளவேணும் நீர் வடியுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பெண்களும், குழந்தைகளும்

துணிகளை படிகளிலும், சுவர்களிலும் உலர்த்தி காய வைக்க போராடும் குடியிருப்புவாசிகள்

வெள்ள நீரிலிருந்து காரை மீட்கும் செம்மஞ்சேரி மக்கள்

புதிதாக குறிக்கப்பட்டுள்ள மனைகளும் நீரில் மூழ்கியுள்ளன
தமிழில்: சவிதா