“பங்கா இரண்டு விஷயங்களுக்கு புகழ்பெற்றது. அமர்பூரிலிருந்து கிடைக்கும் வெல்லம் மற்றும் கட்டோரியாவிலிருந்து கிடைக்கும் டசர் பட்டு“ என்று அப்துல் சத்தார் அன்சாரி கூறுகிறார். கட்டோரியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நெசவுத்தொழிலாளி. ஆனால் இரண்டுமே இப்போது குறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.
அமர்பூர் வட்டத்தில் கட்டோரியாவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பல்லிகிட்டா கிராமம் உள்ளது. கிராமத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள வெல்ல ஆலையை கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது. கரும்பின் கடுமையான வாசமே அந்த இடத்தை நமக்கு எளிதாக காட்டிவிடும்.
பிகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள இந்த ஆலை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது என்று ராஜேஷ் குமார் கூறுகிறார். அவரது தந்தை சாதுசரண் கப்ரியாவால் துவங்கப்பட்டது இந்த ஆலை. 12 முதல் 15 தொழிலாளர்களைக்கொண்ட சிறிய கரும்பு ஆலை இது. அவர்கள் நாளொன்றுக்கு ரூ.200 கூலியாகப்பெறுகிறார்கள். காலை 10 மணிக்கு துவங்கும் வேலை மாலை சூரியன் மறையும் நேரத்தில் 6 மணிக்கு முடியும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இயங்குகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் உச்சகட்ட மாதங்களாகும்.

“அம்பர்பூரில் 10 முதல் 12 வெல்ல ஆலைகள் உள்ளன. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்டவை இருந்தன“ என்று ராஜேஷ் குமார் கூறுகிறார். ஆலைக்கு சொந்தக்காரர். “இங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பல்லிகிட்டா, பஜா, பர்கோ, பைடா சாக் மற்றும் கொகாமா போன்ற அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வருபவர்கள்“

ஆலையில் உள்ள கரும்பு அரைக்கும் இயந்திரம் மட்டும் மாலை 4 மணியுடன் நிறுத்தப்படும். எனவே அனைத்து சாறையும் பதப்படுத்த போதியளவு நேரம் இருக்கும். “இந்த ஆலையைப்போன்றே இந்த இயந்திரமும் மிகப்பழமையானது“ என்று குமார் கூறுகிறார். இவற்றிலிருந்து வெளியேறும் சாறு மொத்தமும் நிலத்திற்கு அடியில், இயந்திரத்தின் மற்றொருபுறத்தில் உள்ள குழியில் சேகரிக்கப்படும்

அக்ஷய் லால் மண்டல் (60), 4 சுவர்கள் கொண்ட குழியில் இறங்கி அடியில் தேங்கியிருக்கும் சாற்றை சேகரிக்கிறார். அதை கொள்கலன்களில் சேகரித்துக்கொண்டு, ஆலையின் மற்றொரு பகுதியில் உள்ள கொதிக்கவைக்கும் குழிக்கு எடுத்துச்செல்கிறார். “நான் கொல்கத்தாவில் இரும்பு கொல்லராக பணிபுரிந்தேன். எனக்கு தற்போது வயதாகிவிட்டது. எனவே நான் எனது கிராமத்திற்கு திரும்பிவிட்டேன். இங்கு மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்“ என்று மண்டல் கூறுகிறார். “என்னைப்போல் வயதானவர்கள் இங்கு நிறைய பேர் தங்கள் கிராமத்திற்கு திரும்பியவர்கள் உள்ளார்கள்“

“இது இன்றைய நாளின் கடைசி நடை. சாறு இறங்கும் குழிக்கும், காய்ச்சும் குழிக்கும் இடையே நாள்தோறும் நடந்துகொண்டே இருப்பேன்“ என்று மண்டல் கூறுகிறார். தற்போது முற்றும் சோர்வடைந்ததைப்போல் தெரிகிறார். “நாங்கள் எங்கள் வேலைகளை மாற்றிக்கொண்டே இருப்போம். இன்று காலை முதல் மதியம் வரை அரை நாள் நான் கரும்பை இறக்கிக்கொண்டிருந்தேன்“

காய்ந்த கரும்பு சக்கைகள் அனைத்தும் கொதிக்க வைப்பதற்கு எரிக்கப்பயன்படுத்தப்படும். ராஜேந்திர பாஸ்வான் (45), கொதிக்கவைக்கும் அடுப்பை தொடர்ந்து எரியூட்டுகிறார். ஆலையின் சொந்தக்காரருக்கு சொந்தமாக கரும்பு வயல்கள் உள்ளன. “அதனால்தான் ஆலையை இன்னும் இயக்க முடிவதாக“ அவர் கூறுகிறார். “மற்ற ஆலைகள், ஆலையின் சொந்தக்காரர்கள், இப்பகுதியில் கரும்பு பயிரிடப்படுவது லாபமற்றது என்று எண்ணியவுடனே மூடிவிட்டார்கள்“ என்று ராஜேஷ்குமார் கூறுகிறார்

இந்த ஆலையில் மொத்தம் 3 கொதிக்க வைக்கும் குழிகள் உள்ளன. கரும்புச்சாறு முதலில் காய்ச்சப்படுகிறது. அது பாகான உடன் இரண்டாவது குழிக்கு மாற்றப்படுகிறது. அங்கு மேலும் சிறிது காய்ச்சப்படுகிறது. அப்போது மேலே மிதந்து வரும் தூசிகள் பெரிய இரும்பி கரண்டியின் மூலம் அகற்றப்படும். அவை முக்கியமான கொதிக்கும் குழியை ஒட்டியிருக்கும் குப்பைத் தொட்டியில் போடப்படும். அப்போது, மூன்றாவது குழிக்கு அந்த பாகு மாற்றப்படும். அங்குதான் அவை வெல்லமாகிறது

ஒட்டக்கூடிய தண்ணீர் பதமுள்ள திரவ வெல்லத்தை, கயிறு மற்றும் மரகம்பிகள் கட்டப்பட்டுள்ள கொள்கலுனுக்கு ஒருவர் மாற்றுவார்

கடைசியாக கொதிக்க வைக்கப்பட்டபின்னர், சிறிய கல் குழிகளில், திடப்பொருளாக மாறிவிட்ட வெல்லப்பாகு குளிர்விக்கப்படும். சுபோத் போடார் (வலது) பொன்னிற வெல்லப்பாகை தகர கொள்கலன்களில் ஊற்றுகிறார். “நான் ஒரு விவசாயி. ஆனால், ஆலையின் சொந்தக்காரர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர் (பல்லிக்கிட்டா). தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் என்னை வருமாறு கூறினார்“ என்று அவர் கூறுகிறார்

“நான் வெல்லத்தின் பதம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கிறேன். பின்னர் கொள்கலனை மூடிவிடுவேன்“ என்று ராமச்சந்திர யாதவ் கூறுகிறார். அவர் பஜாவிலிருந்து ஆலைக்கு வருகிறார். அந்த கிராமம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு முன்னர் அவர் வேறு ஆலைகளில் பணிபுரிந்துள்ளார். அதில் பெரும்பாலானவை இப்போது இயங்கவில்லை. “இப்போது கரும்பு அரிதாகவே பயிரிடப்படுகிறது. எனவே ஆலைகள் மூடப்பட்டுவிட்டன“ என்று அவர் கூறுகிறார்

இது மாலை நேரம், ஆலைகள் மூடப்படும் நேரமாகிவிட்டது என்று பஜாவைச் சேர்ந்த சுபாஷ் யாதவ் (38) கூறுகிறார். அவர் தனது மாட்டுவண்டியைப் பயன்படுத்தி அருகில் உள்ள வயல்களில் கடைசியாக உள்ள கரும்பை எடுத்து வருகிறார். “நான் இந்த வேலையை பல காலமாக செய்துவருகிறேன்“ என்று அவர் கூறுகிறார்

அங்குள்ள ஆண்கள் அந்த மாட்டுவண்டி வருவதற்காக காத்திருக்கிறார்கள். அது வந்தவுடன் அவர்கள் அவற்றையெல்லாம் இறக்க வேண்டும். இந்த வேலையை முடித்துவிட்டு அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள்

இதற்கிடையில்,
இரண்டு பசுமாடுகள் சாறு நிறைந்த கரும்பை சுவைக்கின்றன. அவை ஆலையின் சொந்தக்காரருடைய
பசுக்கள். அதனால்தான், அவை சுதந்திரமாக அங்கு சுற்றித்திரிகின்றன
தமிழில்: பிரியதர்சினி. R.